பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2020 2:27 AM GMT (Updated: 17 Sep 2020 2:27 AM GMT)

பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலம் பேணி, அவர்களின் உரிமைகளையும், பாதுகாப்பினையும் உறுதிபடுத்த பல்வேறு முன்னோடி திட்டங்கள் தீட்டி, செயல்படுத்தியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

* தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பாலின விகித மேம்பாட்டினை உறுதி செய்வதற்காக பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.

* பெண் சிசுக்கொலையை ஒழிக்க, தொட்டில் குழந்தை திட்டம்.

* பெண்கள் உயர்கல்வி கற்க ஊக்குவிக்கவும், ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோரின் மகள்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்காக உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.

* ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் தங்குவதற்கு அரசு சேவை இல்லங்கள்.

* பணிபுரியும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கும் அம்மா இருசக்கர வாகன திட்டம் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மகளிர் காவல் நிலையங்கள் தொடக்கம்

* பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும் வகையிலும், முன்னோடியாக, 1992-ம் ஆண்டில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

* இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஒரு முன்னோடி திட்டமாக 6-3-2019 முதல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கத்திற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் கண்காணிப்பு பிரிவு, சிறப்பு சிறார் காவல் பிரிவு, வரதட்சணை தடுப்பு பிரிவு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆகிய அலகுகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு பிரசாரம்

* சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 35 அனைத்து காவல் நிலையங்களுக்கும் நவீன வசதிகள் பொருத்திய ஊர்திகள், நிர்பயா நிதியின் கீழ் வழங்கப்பட்ட அம்மா ரோந்து வாகனம் மூலம் ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றின் வாயிலாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும் குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

* அதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 போன்றவையும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, குற்றங்கள் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளன.

10 ஆண்டு ஜெயில்

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பினை மேலும் உறுதி செய்வதற்கு அ.தி.மு.க. அரசு, 1860-ம் ஆண்டைய இந்திய தண்டனை சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று கீழ்க்கண்ட சட்டத்திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்.

* பிரிவு 304-பி-ல் வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையை, குறைந்தபட்சம் 10 ஆண்டு தண்டனையாக வழங்குதல்.

* பிரிவு 354-பி-ல் குற்ற நோக்கத்துடன் (பெண்களின் ஆடைகளை களைதல்) செயல்படுவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக வழங்கப்படும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை கடுமையாக்கி 10 ஆண்டுகளாகவும் வழங்குதல்.

மத்திய அரசுக்கு பரிந்துரை

* பிரிவு 354-டி-ல் தவறான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந்தால், இரண்டாம் முறையும், தொடர்ந்தும் குற்றமிழைத்தால் தற்போது வழங்கப்படும் 5 ஆண்டுகள் வரையான சிறை தண்டனையை, அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக்கவும்.

* பிரிவு 372-ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்கு உட்பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373-ல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்கு உட்பட்ட நபர்களை விலைக்கு வாங்குதல், தற்போது வழங்கப்படும் அதிகபட்சமான 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைக்கு பதிலாக, குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

அ.தி.மு.க. அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று அவர்களை காக்கும் என உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story