திண்டுக்கல் அருகே மூதாட்டி வெட்டிக்கொலை வாலிபர் பிடிபட்டார்


திண்டுக்கல் அருகே மூதாட்டி வெட்டிக்கொலை வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 20 Sept 2020 11:30 AM IST (Updated: 20 Sept 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மூதாட்டியை வாலிபர் வெட்டிக்கொலை செய்தார்.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி மீனாட்சி (வயது 60). இவர் செட்டிநாயக்கன்பட்டியில் இருந்து நந்தவனப்பட்டி செல்லும் ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தார். இவர் அதிகாலையில் கடையை திறந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று இரவு கடையின் உள்ளே படுத்திருந்தார்.

திண்டுக்கல் சீலப்பாடி டேவிட் நகரைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (19). இவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு இவர் அந்த வழியாக சென்றபோது மீனாட்சியை தாக்கி கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்தநிலையில் மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் பிரகதீஸ்வரனை பிடித்து கட்டி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொதுமக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோ திவ்யன், திண்டுக்கல் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பியது. பின்னர் போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்ட பிரகதீஸ்வரனை போலீசார் விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீனாட்சியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பிரகதீஸ்வரனிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story