வடகாடு, மாங்காடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை


வடகாடு, மாங்காடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
x

வடகாடு, மாங்காடு பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகாடு,

வடகாடு, மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள், குறுவை சம்பா சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்பட்ட நெல்லை வடகாடு மற்றும் மாங்காடு பகுதிகளில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று வந்தனர்.

ஆனால், அந்த கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால், தாங்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை இடைத்தரகர்கள் மூலமாக, குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

வடகாடு, மாங்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்குழாய் மூலம் குறுவை சம்பா சாகுபடி செய்துள்ளோம். இப்பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெல்லை வடகாடு முத்துமாரியம்மன் கோவில் அருகேயும், மாங்காடு பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று வந்தோம்.

திறக்க கோரிக்கை

அதன்பிறகு இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டது. இதனால், வேறு வழியின்றி தனியார் வசம் 62 கிலோ எடையுள்ள நெல் மூட்டை 1-க்கு ரூ.800 என்ற விலைக்கு கொடுத்து வருகிறோம். தனியார் அறவை மில் முதலாளிகள் இடைத்தரகர்கள் மூலமாக, விவசாயிகளது நெல் வயலுக்கு நேரடியாக சென்று நெல் மூட்டைகளை வாங்கி அதிக லாபம் பார்த்து வருகின்றனர்.

ஆகவே, வடகாடு, மாங்காடு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story