சேலம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி வாலிபர் கைது


சேலம் அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2020 8:07 AM IST (Updated: 21 Sept 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ஏ.டி.எம். மையத்தில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் இரும்பாலை அருகே உள்ளது அழகுசமுத்திரம். இந்த பகுதியில் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான ஏ.டி..எம். மையம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தனர். பின்னர் மையத்துக்குள் சென்ற மர்மநபர்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் வயரை துண்டித்து உள்ளனர்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அதிக சத்தத்துடன் ஒலித்து உள்ளது. இதனால் பயந்து போன மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் மர்மநபர்கள் வயரை துண்டிக்கும் போது வங்கி ஊழியர் ஒருவரின் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் சென்று உள்ளது. இதுகுறித்து அவர் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் இரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

வாலிபர் கைது

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வங்கி அதிகாரிகளிடம் ஏ.டி.எம். எந்திரத்தில் எவ்வளவு பணம் வைக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் எடுத்தது போக மீதி சரியான அளவில் பணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சேலம் இரும்பாலை அருகே உள்ள முருகன் லைன் பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பழனிவேல் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story