மூதாட்டி கொலை வழக்கில் கைது: கொரோனா பாதித்த வாலிபர் தப்பி ஓட்டம்


மூதாட்டி கொலை வழக்கில் கைது: கொரோனா பாதித்த வாலிபர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2020 3:02 AM GMT (Updated: 22 Sep 2020 3:02 AM GMT)

மூதாட்டியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஆராங்கல்திட்டை சேர்ந்தவர் அய்யண்ணன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). இவர் கடந்த 17-ந் தேதி கல்லாங்குத்து கரட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மூதாட்டி கொலை தொடர்பாக ஓமலூர் அருகே உள்ள கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த நரேஷ்குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இதில், சம்பவத்தன்று லட்சுமியிடம் அவர் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் பணம் தரமறுத்ததால் அவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தை நெரித்து நரேஷ்குமார் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.800-ஐ திருடி விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

தப்பி ஓட்டம்

இதையடுத்து சிறையில் அடைப்பதற்கு முன் நரேஷ்குமாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே நரேஷ்குமாரிடம் விசாரணை நடத்திய போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் நேற்று அதிகாலை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவரை கட்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பலப்படுத்த வேண்டும்

ஏற்கனவே கொரோனா பாதித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆத்தூரை சேர்ந்த கொலை வழக்கு கைதி உள்பட சிலர் தப்பி சென்று உள்ளனர். பின்னர் அவர்களை போலீசார் தேடி பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் கொலை வழக்கு கைதி தப்பி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கொரோனா வார்டில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story