குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Sep 2020 2:38 AM GMT (Updated: 24 Sep 2020 2:38 AM GMT)

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கலங்கலாகவும், சில இடங்களில் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி பாலக்கரை அன்னைநகர் 5-வது தெருவில் மாநகராட்சி குடிநீர் வினியோகிக்கும் குழாயில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது.

மேலும் கழிவுநீர் தெருக்களிலும் ஓடியது. இதனால், குடிநீர் துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை, பாலக்கரையில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்துக்குதிரண்டு சென்றனர். அங்கு பா.ஜனதா கட்சியின் மண்டல தலைவர் ராஜசேகரன் தலைமையில் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து, அடைப்பை உடனடியாக சரிசெய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story