தர்மபுரி மாவட்டத்தில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Sept 2020 8:57 AM IST (Updated: 25 Sept 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடக்க காலத்தில் குறைந்து காணப்பட்டது. தற்போது பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 58 மற்றும் 51 வயது போலீஸ்காரர்கள், அரூர் அருகே பச்சினம்பட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயது போலீஸ்காரர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 37 வயது பெண் போலீஸ் உள்பட மாவட்டம் முழுவதும் 4 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று பாலக்கோடு அருகே மல்லாபுரத்தை சேர்ந்த 42 வயது ஆசிரியர், பாலக்கோட்டை சேர்ந்த 34 வயது பெண் டாக்டர், அதே பகுதியைச் சேர்ந்த 36 வயது மெக்கானிக் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காரிமங்கலம் அருகே முக்குலத்தை சேர்ந்த 47 வயது டிரைவர், அரூர் பச்சினம்பட்டியை சேர்ந்த 38 வயது டிரைவர், பென்னாகரம் அருகே கூத்தப்பாடி பகுதியை சேர்ந்த 47 வயது டிரைவர், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பை பகுதியை சேர்ந்த 50 வயது கண்டக்டர், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 49 வயது நெடுஞ்சாலை துறை பணியாளர், மெளசியை சேர்ந்த 53 வயது கூட்டுறவு துறை பணியாளர் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள்

இதே போன்று மாவட்டம் முழுவதும் 15 பெண்கள், 4 மாணவ, மாணவிகள், 13 கூலித்தொழிலாளர்கள், 2 விவசாயிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளோரின் எண்ணிக்கை 2689 ஆக உயர்ந்துள்ளது.

Next Story