குமரி மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் அதிகாரி தகவல்


குமரி மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 28 Sep 2020 2:38 AM GMT (Updated: 28 Sep 2020 2:38 AM GMT)

குமரி மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

நாகர்கோவில்,

ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தை முறைப்படுத்தவும், அதில் நடக்கும் குளறுபடி மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்க கைரேகை பதிவை அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதாவது, ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே, ரேஷன் கடைக்கு சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து ஒப்புதல் அளித்தபிறகே பொருட்கள் வழங்கப்படும். இந்த கைரேகை பதிவதற்கும், வினியோகம் செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் குறிக்கவும் பயோமெட்ரிக் கருவி மூலம் மேற்கொள்ளப்படும்.

இந்த பயோமெட்ரிக் கருவி தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறையில் ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், தோவாளை, கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய தாலுகாக்களில் உள்ள 794 ரேஷன்கடைகளுக்கும் நேற்று பயோமெட்ரிக் கருவிகள் வினியோகம் செய்யப்பட்டன.

அதிகாரி தகவல்

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரியிடம் கேட்டபோது, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளுக்கும் பயோமெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும். முன்னதாக பயோமெட்ரிக் கருவியை கையாள்வது குறித்து ரேஷன்கடை ஊழியர்களுக்கு, அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

Next Story