அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் 7-ந் தேதி திறப்பு காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி திறந்து வைக்கிறார்


அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலம் 7-ந் தேதி திறப்பு காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 29 Sep 2020 11:26 PM GMT (Updated: 29 Sep 2020 11:26 PM GMT)

அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் வருகிற 7-ந் தேதி திறந்து வைக்கிறார்.

புதுச்சேரி,

புதுவை-விழுப்புரம் இடையே அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் மூடப்படும் போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். இதையடுத்து அங்கு பாலம் கட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து அரும்பார்த்தபுரம் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே பாலம் கட்ட கடந்த 2011-ம் ஆண்டு ரெயில்வே துறை மந்திரியாக இருந்த மல்லிகார்ஜூன கார்கே அடிக்கல் நாட்டினார். ரூ.30 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் நிதி பற்றாக்குறை மற்றும் இணைப்பு பகுதிக்கான நிலத்தை கையகப்படுத்துவதில் இழுபறி நீடித்ததால் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன்பின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்றது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழா காண பாலம் காத்திருக்கிறது.

7-ந் தேதி திறப்பு

இந்த பாலத்தை திறந்து வைப்பது குறித்து மத்திய அரசிடம், புதுவை அரசு அனுமதி கேட்டது. தற்போது இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) இதற்கான திறப்பு விழா நடக்கிறது. காணொலி காட்சி மூலம் பாலத்தை மத்திய மந்திரி நிதின்கட்காரி திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த பாலம் திறக்கப்பட்டதும் புதுவை-விழுப்புரம் இடையே பயணநேரம் 30 நிமிடம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

Next Story