ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை: கட்டமைப்பு வசதிகளை மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு


ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை: கட்டமைப்பு வசதிகளை மருத்துவ குழுவினர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2020 10:15 AM IST (Updated: 2 Oct 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வரும் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது குறித்து பல்கலைக்கழக உத்தரவின்படி மருத்துவ குழுவினர் ராமநாதபுரம் வந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவகல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி கட்டிட பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைத்தார். ரூ.345 கோடியிலான இந்த மருத்துவ கல்லூரி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகில் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் இரவு- பகலாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2021-ல் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கான தகுதிகளை ஆராய்ந்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிப்பதற்கான ஆய்வை மேற்கொள்ள எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக வழிகாட்டுதலின்படி மருத்துவகுழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி நெல்லை மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் ராஜவேல்முருகன், கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் நிர்மல்குமார் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரம் வந்தனர்.

இந்த குழுவினர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு பகுதியாக சென்று மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா, புதிய கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப நடைபெற்று வருகிறதா, தற்போதைய டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை, தேவைப்படும் பணியாளர் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்தஆய்வின் அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுப்பி வைத்து அதன்அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ குழு தலைவர் டாக்டர் சாந்தாராம் கூறியதாவது:- எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக உத்தரவின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பணியாளர்கள், டாக்டர்கள் தேவை குறித்து அறிக்கை அளிக்க உள்ளோம். இந்த ஆய்வில் வரும் 2021-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான தகுதி இருப்பதாக பரிந்துரை செய்துள்ளோம். எனவே, அதற்கான அங்கீகாரம் விரைவில் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினர். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அல்லி, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story