உரம் வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் வேளாண்மை அதிகாரி தகவல்


உரம் வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் வேளாண்மை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2020 4:24 AM IST (Updated: 5 Oct 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உரங்கள் வாங்குவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் உரம் வாங்கச்செல்லும் விவசாயிகள், தங்கள் ஆதார் அட்டையை அவசியம் எடுத்து செல்ல வேண்டும். ஆதார் எண்ணை பயன்படுத்தி, விற்பனை முனைய கருவி (பி.ஓ.எஸ்.) மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படும். ஆதார் அட்டையை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் உரம் பெறும்போது, வழங்கப்படும் விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை மட்டுமே விவசாயிகள் வழங்கினால் போதுமானது.

எனவே விவசாயிகள் சரியான விலையில் உரத்தை பெற ஆதார் அட்டையை அவசியமாக கொண்டு செல்ல வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள் சரியான முறையில் அவர்களை சென்றடைவதே இதன் நோக்கமாகும்.

உரிமம் ரத்து

விவசாயிகள், யூரியா உரங்களை மண்வள அட்டையின் பரிந்துரைப்படி இட்டால், மண்வளமும் பாதுகாக்கப்பட்டு உயர் விளைச்சலும் கிடைக்கும். அளவுக்கு அதிகமாக யூரியா இடுவது பூச்சிநோய் தாக்குதலை அதிகரிக்க செய்யும். உர விற்பனையாளர்கள் உர இருப்பு மையங்களில், உர இருப்பு மற்றும் விலை விவரம் ஆகியவற்றை இருப்பு பலகையில் தினசரி பதிவு செய்ய வேண்டும். உரத்தட்டுப்பாடு ஏற்படும் வகையில் நடந்து கொள்பவர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story