கோவை அரசு கல்லூரியில் படித்தவருக்கு இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி பணி


கோவை அரசு கல்லூரியில் படித்தவருக்கு இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி பணி
x
தினத்தந்தி 5 Oct 2020 11:45 AM IST (Updated: 5 Oct 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு கலைக் கல்லூரியில் படித்த மாணவருக்கு, இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி பணி கிடைத்துள்ளது.

கோவை,

கோவை அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறையில், கடந்த 2019-ம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை முடித்த மாணவர் எஸ்.மணிபாரதி. இவருக்கு இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி பணி கிடைத்துள்ளது. இதுகுறித்து எஸ்.மணிபாரதி கூறியதாவது:-

தேசிய மாணவர் படை (என்.சி.சி) சிறப்பு அனுமதி மூலமாக இப்பணிக்கு விண்ணப்பித்தேன். பட்டப்படிப்பு முடித்து, தேசிய மாணவர் படையில் குறைந்தபட்சம் ‘சி‘ சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள். நான் ‘பி‘, ‘சி‘ என இரு சான்றிதழ் தேர்வுகளில் ‘ஏ‘ கிரேடில் தேர்ச்சி பெற்றிருந்தேன். இதனால் எனக்கு தகுதி கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராணுவ முகாமில் 5 நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. உளவியலைப் பரிசோதிக்கும் வகையிலும், பொது அறிவைப் பரிசோதிக்கும் வகையிலும் நேர்காணல் அமைந்தது.

சிவில் சர்வீஸ் பணிகளுக்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை போல், இருந்தது இந்த நேர்காணல். அதில் தேர்வாகி பின்னர் மருத்துவப் பரிசோதனையும் முடிந்து விட்டது. வரும் நவம்பர் மாதம் 49 வார பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறுகிறது. அப்பயிற்சியை முடித்தவுடன் ராணுவத்தில் ‘லெப்டினன்ட்‘ ஆக இணைய உள்ளேன்.

இதற்கு என்னுடைய தேசிய மாணவர் படை அலுவலர் ஜாகீர் உசைன், தேசிய மாணவர் படை லெப்டினன்ட் கர்னல் கிரீஷ் பார்த்தான் ஆகியோர் உதவிகரமாக இருந்தனர்.

எனக்கு சொந்த ஊர் சென்னை. அப்பா சுரேஷ் தபால் துறை ஊழியர். அவருக்கு கோவைக்கு இடமாறுதல் கிடைத்ததால் நாங்கள் இங்கு குடிபெயர்ந்தோம். பள்ளி படிப்பை சென்னையில் முடித்தேன். கல்லூரி படிப்பை கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஆண்டு முடித்தேன். அப்பா பணி ஓய்வு பெற்றதால் மீண்டும் சென்னைக்கே செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவத்தில் பணி கிடைத்துள்ள எஸ்.மணிபாரதிக்கு, அரசு கலைக் கல்லூரி முதல்வர் க.சித்ரா மற்றும் சக ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story