திருச்சி-காரைக்குடி ரெயில் பாதை மின் மயமாக்கல் பணிகள் தீவிரம்


திருச்சி-காரைக்குடி ரெயில் பாதை மின் மயமாக்கல் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 5 Oct 2020 10:47 AM IST (Updated: 5 Oct 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-காரைக்குடி மார்க்க ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

புதுக்கோட்டை,

நாட்டில் ரெயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், டீசல் செலவினத்தை குறைக்கவும் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தி ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு ரெயில் போக்குவரத்து சேவை பயன்பாட்டில் உள்ளது.

இதேபோல திருச்சியில் இருந்து தஞ்சை, கரூர் மார்க்க பாதைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம் வரை ரெயில் பாதை மின்யமாக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது.

மின்கம்பங்கள்

திருச்சியில் இருந்து காரைக்குடி வரை ஒரு பகுதியாகவும், காரைக்குடி-ராமேசுவரம் வரை 2 பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டு ரெயில் பாதை மின்மயமாக்கப்படுகின்றன. இதில் திருச்சி-காரைக்குடி ரெயில் பாதை மின்மயமாக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வரை ரெயில் பாதை அருகே மின்கம்பங்கள் அமைக்க பணிகள் மும்முரமாக நடக்கிறது. இதேபோல புதுக்கோட்டை-காரைக்குடி இடையேயும் தண்டவாள பாதை அருகே மின்கம்பங்கள் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது.

இந்த பணிகள் குறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறுகையில், “திருச்சி-காரைக்குடி ரெயில் பாதை மின்மயமாக்கலில் மின்கம்பங்கள் அமைப்பதற்கான பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. மின்பாதைக்கான துணை மின்நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. மின்கம்பங்கள் அமைத்த பின் மின்சார கம்பிகள் பொருத்தப்படும். பகுதி, பகுதியாக இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட உள்ளது. மின்மயமாக்கும் பணி முடிந்த பின் இந்த வழித்தடத்தில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தி ரெயில்கள் இயக்கப்படும்“ என்றனர்.

Next Story