கொலை வழக்கில் சாட்சி சொன்னதால் ஆத்திரம்: கார் டிரைவரை கடத்தி கொலை செய்ய முயற்சி


கொலை வழக்கில் சாட்சி சொன்னதால் ஆத்திரம்: கார் டிரைவரை கடத்தி கொலை செய்ய முயற்சி
x
தினத்தந்தி 6 Oct 2020 10:00 PM GMT (Updated: 6 Oct 2020 10:00 PM GMT)

கொலை வழக்கில் சாட்சி சொன்னதால் கார் டிரைவரை கடத்தி கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வானூர்,

புதுவை குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் நாராயணன் (வயது 25). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அரவிந்த் நாராயணனை கடத்தி சென்றனர்.

இதை பார்த்தவுடன் அவரது தாயார் புஷ்பாவதி அதிர்ச்சி அடைந்து வானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குருமாம்பேட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (30) உள்பட 4 பேர் அரவிந்த் நாராயணனை கடத்தியது தெரியவந்தது.

கொலை வழக்கு சாட்சி

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ராஜேசின் அண்ணன் ஜெகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கொக்கி விக்னேஷ் என்பவர் செய்துள்ளார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக காரைக்காலில் வைத்து கொக்கி விக்னேசை, ராஜேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு புதுவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கொக்கி விக்னேசின் கூட்டாளியான அரவிந்த் நாராயணன் முக்கிய சாட்சியாவார். அவர் வழக்கு விசாரணையின்போது ராஜேசுக்கு எதிராக சாட்சி சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரவிந்த் நாராயணனை கடத்தி சென்றது தெரியவந்தது.

4 பேருக்கு வலைவீச்சு

இந்த நிலையில் வில்லியனூர் அருகே உள்ள மங்கலம் சங்கராபரணி ஆற்றில் அரவிந்த் நாராயணன் தலை, கழுத்து, கை, கால் ஆகிய இடத்தில் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தெரிவித்தனர்.

உடனே மங்கலம் போலீசார் விரைந்து சென்று அரவிந்த் நாராயணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story