ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு கடத்த முயற்சி: டேங்கர் லாரியில் பதுக்கிய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு கடத்த முயற்சி: டேங்கர் லாரியில் பதுக்கிய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2020 4:35 AM IST (Updated: 7 Oct 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு டேங்கர் லாரியில் கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை செங்குன்றம் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

செங்குன்றம்,

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மினி லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் 3 கிலோ கஞ்சா சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மாதவரம் துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் மற்றும் போலீசார் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்று 2 நாட்கள் தங்கியிருந்து முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் அதே விசாகப்பட்டினத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வழியாக திருச்சிக்கு நூதன முறையில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாதவரம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் உள்ளிட்ட தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு முதல் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சோதனைச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்

இந்த நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் ஆந்திராவில் இருந்து செங்குன்றம் நோக்கி தார் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியை தீவிரமாக சோதனை செய்ததில், டேங்கர் லாரியின் உள்ளே 550 கிலோ எடையுடன் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடந்து, ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், டேங்கர் லாரி டிரைவரான விசாகப்பட்டினத்தை சேர்ந்த சச்சின் நாராயணன் (வயது 35), சென்னை செனாய் நகர் அவ்வைபுரத்தைச் சேர்ந்த லாரி கிளீனர் சுந்தர் (50) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கிராமங்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் கஞ்சாவை வாங்கி பதப்படுத்தி மூட்டைகளில் செங்குன்றம் வழியாக திருச்சி, மதுரை மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு கடத்தி சென்று வினியோகிக்கப்படுவது தெரியவந்தது. ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சாவை சாலை வழியாக கடத்தி செல்ல முயன்று போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story