நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்மன்ற தலைவர் கொலையில் 6 பேர் கைது பரபரப்பு தகவல்கள்


நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்மன்ற தலைவர் கொலையில் 6 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:56 PM GMT (Updated: 8 Oct 2020 10:56 PM GMT)

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்மன்ற தலைவர் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

புதுச்சேரி,

புதுவை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது36). பெயிண்டரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மாநில விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவராக பதவி வகித்தார். இவரது மனைவி விஜயகுமாரி.

மணிகண்டனுக்கும், அவரின் மைத்துனரும், ரசிகர்மன்ற செயலாளருமான ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகர் (33) என்பவருக்கும் ரசிகர் மன்ற தலைவர் பதவியை பெறுவதில் போட்டி இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ரசிகர் மன்றத்தில் ராஜசேகருக்கு ஆதரவு அதிகரித்தது. இதனால் அவர் தலைவர் போல் துடிப்புடன் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து விலகி விடும்படி மணிகண்டனை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனாலும் கடந்த 2 மாதங்களுக்கு முன் மாநில ரசிகர் மன்ற தலைவராக மீண்டும் மணிகண்டன் நியமிக்கப்பட்டார்.

பதவிப் போட்டி

இதையொட்டி ரசிகர் மன்ற தலைவர் பதவியை பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியால் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் சதி திட்டத்தை வகுத்தனர். இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி இரவு நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே சென்ற போது வழிமறித்து கண் இமைக்கும் நேரத்தில் மணிகண்டன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் கொலையில் தொடர்புடையவர்கள் பற்றிய விவரம் போலீசாருக்கு கிடைத்தது.

6 பேர் கைது

அதாவது, ஆட்டுப்பட்டி ராஜசேகர் (33), சுனில் (20), சந்தோஷ்குமார் (28), மாறன் (27), ஜான்சன் (24) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 6 பேர் சேர்ந்து மணிகண்டனை வெட்டிக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் புதுவையில் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக பதுங்கி இருந்த ராஜசேகர், சுனில், சந்தோஷ்குமார், மாறன், ஜான்சன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் காலாப்பட்டு சிறையிலும், அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

பாராட்டு

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் கொலையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், போலீஸ்காரர்கள் ராஜரத்தினம், செல்லதுரை, சத்தியவேல், பிரேம் ஆகியோரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Next Story