கர்நாடகத்தில் 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது + "||" + In Karnataka, 2,865 people have been arrested in drug cases in the last 80 months
கர்நாடகத்தில் 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது
கர்நாடகத்தில் கடந்த 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கால் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் அதிகரித்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் மற்றும் விற்பனையாளர்களுடன் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு உள்ள சம்பவமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள், தொழில்அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது மற்றும் கன்னட திரை உலகில் மற்ற நடிகர், நடிகைகளுக்கு உள்ள தொடர்பு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இன்னும் பலர் போதைப்பொருள் பயன்படுத்தியது, விற்றதாக போலீசாரிடம் சிக்க வாய்ப்புள்ளது.
2,865 பேர் கைது
இந்த நிலையில், பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளை விட இந்த ஆண்டு போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2017-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 1,126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,604 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு 1,032 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்ததுடன், 1,470 பேரை போலீசார் கைது செய்திருந்தார்கள். கடந்த ஆண்டு (2019) 1,661 வழக்குகளை பதிவு செய்திருந்த போலீசார், போதைப்பொருட்கள் விற்றதாக 2,263 பேரை கைது செய்திருந்தார்கள்.
ஆனால் இந்த ஆண்டு (2020) செப்டம்பர் 15-ந் தேதி வரை போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக 2,589 வழக்குகள் மாநிலம் முழுவதும் பதிவாகி இருக்கிறது. மேலும் போதைப்பொருட்கள் விற்றதாக கடந்த 8½ மாதங்களில் மட்டும் 2,865 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவற்றில் பெங்களூருவில் மட்டும் கடந்த 8½ மாதங்களில் போதைப்பொருள் விற்றது, பயன்படுத்தியதாக 2,587 பேர் கைதாகி உள்ளனர். அவர்களில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியும் அடங்குவார்கள். ஒட்டு மொத்தமாக கடந்த 8½ மாதங்களில் பெங்களூருவில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா விற்பனை
இந்த நிலையில், கர்நாடகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிக்க கொரோனா ஊரடங்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த பலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொரோனா ஊரடங்கால் வேலை இழந்ததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அத்துடன் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் எளிதில் பணம் சம்பாதித்து வருவதும் தெரியவந்துள்ளது.
அதாவது ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்திற்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும் கஞ்சாவை பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள வியாபாரிகள் ஒரு கிலோ கஞ்சாவை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்று வருவது தெரியவந்துள்ளது. இதனால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தப்பிக்க முடியாது
அதே நேரத்தில் பெங்களூரு நகரில் கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் மூலமாக அதிகளவில் போதைப்பொருட்கள் விற்பனை நடந்ததும் தெரியவந்துள்ளது. ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடப்பட்டதால், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனை நடந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக போதைப்பொருள் விற்பனை அதிகரிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் கூறுகையில், ’கொரோனா ஊரடங்கு காரணமாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்து விட்டதாக சொல்ல முடியாது. குறிப்பிட்ட மக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிரிமினலாக சிந்திக்கின்றனர். அதுபோன்று சிந்திப்பவர்கள் தான் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவது, போதைப்பொருட்களை பயன்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடியாது’ என்றார்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக காங்கிரஸ் முன்னாள் மந்திரியின் மகனை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.