சென்னையில் போதைப்பொருள் விற்ற மருந்தக ஊழியர் உள்பட 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்
மும்பையில் இருந்து கூரியரில் வரவழைக்கப்பட்ட போதைப்பொருளை சென்னையில் விற்பனை செய்த மருந்தக ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னையில் பெருங்குடி, திருவான்மியூர், பனையூர் உள்பட பல இடங்களில் வெள்ளை நிற பவுடர் வகையிலான புதிய போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக அடையார் துணை கமிஷனர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது நேரடி கட்டுப்பாட்டில் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணையில், ஆசிப் ராஜா (வயது 21) என்ற வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 2 சிறிய பாக்கெட்டுகளில் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர் வைத்திருந்த போதை பொருளை போலீசார் ஆய்வு செய்தபோது, ‘அது மெத்தலின் டையாக்சி மெத்தம்பெட் அமைன்’ என்ற ரசாயன வேதி பொருள் என்பதும், சிறிய துகளை நாக்கில் வைத்தாலோ அல்லது தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்தினாலோ தன்னிலை மறந்து பல மணி நேரம் போதையில் வைத்திருக்கும்’ என்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிப் ராஜாவிடம் நடத்திய விசாரணையில், அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும், இந்த போதைப்பொருளை பனையூரில் உள்ள ஒரு மருந்தகத்தில் வேலைப்பார்த்த மதி (35) என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து மதியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரும் ஓரினசேர்க்கையாளர் என்பதும், ‘ஓரினச்சேர்க்கையாளர் தொடர்பான செல்போன் செயலி’ மூலம் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் ஹூசைன் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் தான் மும்பையில் இருந்து இந்த போதை பொருளை வரவழைத்து, மதி மூலம் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இந்த போதைப்பொருள் விற்பனைக்கு மூளையாக செயல்பட்ட ஹூசைனை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
போலீசாரிடம் ஹூசைன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நான் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கி வேலைபார்த்து வருகிறேன். நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன். எனவே ‘ஓரினச்சேர்க்கையாளர் செல்போன் செயலி’யை பதிவேற்றம் செய்தேன். அதில் என்னுடன் நல்ல முறையில் பேசி ஓரினச்சேர்க்கைக்கு வருபவர்களிடம், இந்த போதை பொருளை ஒரு முறை பயன்படுத்த வைப்பேன்.
இந்த போதை பொருளை ஒரு முறை பயன்படுத்தினாலே, அவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். இவ்வாறு அடிமையாகி மீண்டும் வருபவர்களிடம் ஒரு கிராம் போதை பொருளை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தேன். ஒரு கிராம் போதைப்பொருள் பாக்கெட்டை 40 முறைக்கு மேல் பயன்படுத்தி போதை ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த போதை பொருளை மும்பையில் இருந்து கூரியர் மூலம் வரவழைப்பேன். படித்த இளைஞர்கள், ஐ.டி. ஊழியர்கள் பலரும் இந்த போதைக்கு அடிமையாக உள்ளனர். இந்த நேரத்தில் தான் மதியின் பழக்கம் ஏற்பட்டது. அவர் மருந்தகத்தில் வேலை பார்த்ததால், சந்தேகம் வராது என்று எண்ணி அவரிடம் இந்த போதைப்பொருள் பாக்கெட்டுகளை கொடுத்து விற்பனை செய்து வந்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 பாக்கெட் போதை பொருட்களும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதைப்பொருள் கஞ்சா போன்ற போதை பொருட்களை விட மிகவும் அபாயகரமானது ஆகும். இந்த போதை பொருளை 5 மில்லி கிராம் அளவு எடுத்துக்கொண்டாலே, மூளையில் மெத்திலோன் என்ற வேதிப் பொருளை தூண்டி 10 நிமிடங்களிலேயே மயக்கநிலையை ஏற்படுத்திவிடும்.
தொடர்ந்து பயன்படுத்தினால் மூளையை செயலிழக்க வைத்துவிடும். சில நேரங்களில் உயிருக்கே உலை வைத்து விடும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story