முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி


முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 12 Oct 2020 5:00 AM IST (Updated: 12 Oct 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று கோவையில் பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை,

கோவையில் பா.ஜனதா சார்பில் வேல் வரையலாம் வாங்க என்ற தலைப்பில் ஓவியப்போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற் றது. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் பரிசு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமானது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் வலுவாக இருக்கிறது. அரசியலில் வருங்காலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை சொல்ல முடியாது. அதை தான் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி இப்போது வரை தொடருகிறது. கூட்டணியில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

வரக்கூடிய மாற்றத்தை காலம் தான் முடிவு செய்யும். இன்றைய தேதியில் எந்த மாற்றமும் கிடையாது. புதிதாக கட்சி ஆரம்பிக்க போகின்றவர்கள், புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் உள்ளனர். அவர்களுடன் கூட்டணி வரலாம். அரசியல் பரபரப்பிற்காக பொன்.ராதாகிருஷ்ணன் எதுவும் சொல்லவில்லை. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது.

அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை. அதே சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டாரா என்பதை எங்களின் தேசிய தலைமை சொல்ல வேண்டும். தேசிய தலைமை கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். இது குறித்து எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என அ.தி.மு.க. கட்சியில் முடிவெடுத்து இருக்கின்றனர். அது குறித்து எங்கள் தேசிய தலைவர்கள் கலந்து பேசி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பார்கள். பா.ஜனதா தலைமையில் கூட கூட்டணி அமையலாம். கூட்டணி விஷயங்கள் வருகிற ஜனவரி மாதத்துக்கு பின்பே உறுதியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story