நீலகிரியில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


நீலகிரியில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2020 4:30 AM IST (Updated: 12 Oct 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டத்துக்குள் இயக்கப்படும் அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணிகள் பயணம் செய்வதை உறுதி செய்ய போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி தென்படும் நபர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் பரிசோதனை செய்வதற்காக மாவட்ட எல்லைகளான குஞ்சப்பனை, காட்டேரி சோதனைச் சாவடிகளில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர அறிகுறி கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறி தென்பட்டால் கொரோனா பரிசோதனை நடத்தவும் நடமாடும் வாகன வசதி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தினமும் 2,000 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 700 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் அருகே உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நீலகிரியில் கொரோனா உறுதியான நபர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் என மாவட்டம் முழுவதும் 334 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 317 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. நாளுக்கு நாள் தனிமைப்படுத்தப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதிகளுக்கு வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதாரப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story