சொந்த சின்னத்தில் போட்டியிடுவதால் கூட்டணியில் பாதிப்பு இல்லை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
சொந்த சின்னத்தில் போட்டியிடுவதால் கூட்டணியில் பாதிப்பு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விவசாயிகள், தொழிலாளர்கள் நலனை பறிக்கின்ற வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் சென்னை கிண்டி தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு குரலுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது. தன்னை விவசாயி என சொல்லிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ஆதரிக்கிறார். இந்த சட்டம் விவசாயிகளுக்கு பலனளிக்காது.
தி.மு.க. கூட்டணி உடைந்தால் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு பகல் கனவு காண்கிறார். தி.மு.க. கூட்டணி கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடுவது அவர்களின் உரிமை. இதனால் கூட்டணியில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என ராஜன் செல்லப்பா கூறுவது அவரது ஆசையாக உள்ளது. நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணைவது அவரின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதாகவும், ஆனால் கொரோனா காலத்தால் உடனடியாக அனைவரையும் விடுதலை செய்வதாகவும் போலீசார் அறிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story