அரியலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
அரியலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்,
அரியலூர் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், வேளாண்மை சட்டங்களுக்கு எதிராகவும், அந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். திருமானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஊர்வலமாக வந்து தாசில்தார் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 7 பெண்கள் உள்ளிட்ட 38 பேரை அரியலூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ராஜாபெரியசாமி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு கட்சியினர் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு பெண் உள்பட 21 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் தா.பழூரில் கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமையில் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையொட்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, தா.பழூர் இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்து அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story