அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 Oct 2020 10:47 AM IST (Updated: 19 Oct 2020 10:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்,

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-21-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ்-1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.sch-o-l-a-rs-h-ip.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2020-21-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1,35,127 மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

இக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான மாணவ-மாணவிகள் வருகிற 31-ந் தேதி வரை மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story