தட்டார்மடம் வியாபாரி கொலை: கைதான 2 பேரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு அனுமதி


தட்டார்மடம் வியாபாரி கொலை: கைதான 2 பேரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு அனுமதி
x
தினத்தந்தி 20 Oct 2020 5:57 AM IST (Updated: 20 Oct 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக கைதான 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கி கோவில்பட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 35). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த மாதம் 17-ந் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு அனில்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், சின்னத்துரை, முத்துராமலிங்கம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 4 பேரையும் கடந்த 30-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சேர்ந்த பேச்சி (43), தாமரைமொழி சன்னதி தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (46) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

காவலில் விசாரிக்க அனுமதி

இந்த நிலையில் திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவில்பட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு தொடர்பாக மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகியோரை துணை சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நாளை (புதன்கிழமை) வரை பேச்சி, கருப்பசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அனுமதி வழங்கினார். அவர்கள் 2 பேரையும் நாளை மாலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், திருமணவேலை பேரூரணி சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றனர்.

Next Story