பாகேபள்ளியில் ஆந்திராவை சேர்ந்த பெண் கற்பழித்து கொலை சித்தப்பா கைது


பாகேபள்ளியில் ஆந்திராவை சேர்ந்த பெண் கற்பழித்து கொலை சித்தப்பா கைது
x
தினத்தந்தி 21 Oct 2020 3:01 AM IST (Updated: 21 Oct 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

பாகேபள்ளியில் ஆந்திராவை சேர்ந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிக்பள்ளாப்பூர்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட காரகூரு பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப்பகுதியில் கடந்த 7-ந்தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பாகேபள்ளி போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? போன்ற எந்த விவரமும் முதலில் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே விஜிபுரா கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் உத்தரவின்பேரில் பாகேபள்ளி போலீசார் விஜிபுராவுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

சித்தப்பாவிடம் விசாரணை

அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் சித்தப்பாவான திருப்பதியை சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 50) என்பவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் பாபா பக்ருதீனை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர், அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குவைத் செல்ல...

திருப்பதியை சேர்ந்த தக்காளி வியாபாரியான பாபா பக்ருதீனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவி திருப்பதி அருகே விஜிபுரா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இதனால் பாபா பக்ருதீன் அடிக்கடி விஜிபுராவுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, விஜிபுராவை சேர்ந்த மனைவியின் உறவினரான 30 வயது பெண்ணுடன் பாபா பக்ருதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதாவது, உறவு முறையில் பாபா பக்ருதீன் அந்த பெண்ணுக்கு சித்தப்பா ஆவார்.

அந்த 30 வயது பெண், குவைத்தில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்திருந்தார். இந்த நிலையில் அந்த பெண் மீண்டும் குவைத் செல்ல முடிவு செய்தார். அப்போது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது உள்பட பல்வேறு தேவைகளுக்கு அந்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் தேவைப்பட்டுள்ளது.

கற்பழிப்பு

இதனால் அந்த பெண், பாபா பக்ருதீனிடம் சென்று ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். அப்போது அவர், ரேணிகுண்டாவை சேர்ந்த தனது நண்பர் ஒருவர் தனக்கு பணம் தர வேண்டும், என்னுடன் வந்தால் அந்த பணத்தை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண், கடந்த 4-ந்தேதி அவருடன் சென்றுள்ளார். ரேணிகுண்டா சென்றதும், தனது நண்பரிடம் தற்போது பணம் இல்லை என்று கூறிவிட்டார் எனவும், இதனால் இன்று தங்கும் விடுதியில் தங்கி செல்வோம் எனவும் அந்த பெண்ணிடம் பாபா பக்ருதீன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் ரேணிகுண்டாவில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது, குளிர்பானத்தில் மது கலந்துகொடுத்து அந்த பெண்ணை பாபா பக்ருதீன் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக தெரிகிறது.

அப்போது அந்த பெண், தான் உங்களுக்கு மகள் முறை வேண்டும் என்றும், இதுபற்றி வீட்டில் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபா பக்ருதீன், உனக்கு தேவையான பணம் கொடுக்கிறேன் என்று ஏமாற்றியுள்ளார். பின்னர் அவரை இதேபோன்று துமகூரு மாவட்டம் பாவகடாவுக்கு அழைத்து சென்றும் கற்பழித்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

இதேபோன்று பணம் கொடுப்பதாக கடந்த 7-ந்தேதி பாபா பக்ருதீன், அந்த பெண்ணை சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வைத்தும், பெண்ணுக்கு மது ஊற்றிக் கொடுத்து வலுக்கட்டாயமாக கற்பழித்து உள்ளார். அதன்பின்னர், அவரை உயிருடன் விட்டால் தன்னை காட்டி கொடுத்துவிடுவார் என பயந்த பாபா பக்ருதீன், அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பாகேபள்ளி அருகே காரகூரு கிராமத்தில் வீசி சென்றிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாகேபள்ளி போலீசார் பாபா பக்ருதீனை கைது செய்து பாகேபள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பணம் கேட்ட பெண்ணை, சித்தப்பாவே பலமுறை ஏமாற்றி கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story