ஆறுமுகநேரியில் பரிதாபம் லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


ஆறுமுகநேரியில் பரிதாபம் லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2020 4:36 PM GMT (Updated: 21 Oct 2020 4:36 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்கத்தால், லாரி தொழில் முடங்கியதால் மனமுடைந்த லாரி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இலங்கத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கப்பன் மகன் ராஜூ(வயது 49). இவருக்கு திருமணமாகி பாமா என்ற மனைவியும், அசோக், அருண், அஜித் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.

இவர் காயல்பட்டினத்தில் 5 லாரிகள் வைத்து தொழில் செய்து வந்தார். மேலும், புதிய கட்டுமானங்களுக்கு தேவையான கல், மண், சப்ளையர் ஆகவும் இருந்து வந்தார்.

தொழில் முடங்கியது

இவர் வசிக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வாளவிளையில் புதிதாக ஒரு வீடும் கட்டி வந்தார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், லாரித்தொழில் முடங்கியது. லாரிகள் எங்கும் வாடகைக்கு ஓட்ட முடியாமல் போனது.

இந்த லாரிகள் அனைத்தும் கடன் மூலம் வாங்கி இருந்தார். லாரித் தொழில் மூலம் வரவேண்டிய வருவாய் முற்றிலுமாக முடங்கியதால், லாரிகளுக்கான கடன் தவனைகளும் கட்டாமல் பாக்கி இருந்துள்ளது.

தற்கொலை

இந்நிலையில் புதிதாக கட்டிய வீடும் அரைகுறையாக நிற்கிறது. இதனால் மனம் உடைந்த ராஜூ தினமும் மனம் விட்டு புலம்பி வந்துள்ளார். கடந்த 18-ந்தேதி அவர் திடீரென காணாமல் போனதால், அவரை மகன்கள் தேடியுள்ளனர். அன்று மாலையில் அவர் விஷம் குடித்த நிலையில் வீட்டின் அருகிலேயே வாயில் நுரை தள்ளியவாறு கிடந்துள்ளார்.

அவரைப் பார்த்த மகன்கள் பதறிப்போய், திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் பரிதாபமாக இறந்து போனார்.

இது தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story