கனமழை கொட்டித்தீர்த்தது பெங்களூருவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது விடிய, விடிய மக்கள் அவதி


கனமழை கொட்டித்தீர்த்தது பெங்களூருவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது விடிய, விடிய மக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Oct 2020 10:17 PM GMT (Updated: 21 Oct 2020 10:17 PM GMT)

பெங்களூருவில் கனமழை கொட்டித்தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் விடிய, விடிய மக்கள் அவதிப்பட்டனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக கெங்கேரி, ஆர்.ஆர்.நகர், ஜே.பி.நகர், ஜெயநகர், ஒசகெரேஹள்ளி, விஜயநகர், கோரமங்களா, ஹெப்பால், மல்லேஸ்வரம், கே.ஆர்.மார்க்கெட், சாந்திநகர், மைசூரு ரோடு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாந்திநகர் கர்லி தெருவில் ஒரு மின் கம்பம் சரிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஒசகெரேஹள்ளி பகுதியில் பெய்த கனமழைக்கு ஒரு பெரிய மரம் வேரோடு முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால் அவரது வாகனம் அந்த மரத்தின் அடியில் சிக்கி நொறுங்கியது. கோரமங்களா பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. அங்குள்ள 80 அடி ரோட்டில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீர் புகுந்தது

அந்த சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். கோரமங்களா சி பிளாக்கில் தாழ்வான பகுதியில் இருக்கும் 300 வீடுகளில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் வாகன நிறுத்தும் பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அந்த குடியிருப்பு கட்டிடங்களில் வசிப்போர், வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாயினர்.

ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கனமழை பெய்து அந்த பகுதியில் சாலையில் மழைநீர் வழிந்தோடியதால், அங்கு நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த திருமண மண்டபத்தின் தரைதளத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. அந்த நீரை நேற்று காலை ஊழியர்கள் வெளியேற்றினர்.

தூக்கத்தை தொலைத்தனர்

ஹெப்பால் பகுதியில் உள்ள பத்ரப்பா லே-அவுட், பலராம் லே-அவுட் பகுதிகளுக்குள் சாக்கடை நீருடன் மழைநீரும் சேர்ந்து புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். வீடுகளில் புகுந்த தண்ணீரை அந்த மக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர். சிவானந்த சர்க்கிள், நாயண்டஹள்ளி சர்க்கிள் உள்ளிட்ட பல்வேறு சுரங்க பாதைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாயினர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. குழிகள் இருப்பதே தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரையில் கெங்கேரியில் 124.5 மில்லி மீட்டர், ராஜராஜேஸ்வரிநகரில் 123.5 மில்லி மீட்டர், லக்கசந்திராவில் 115 மில்லி மீட்டர், வி.வி.புரத்தில் 108.5 மில்லி மீட்டர், கொட்டிகெரேயில் 101 மில்லி மீட்டர், நாகரபாவியில் 98 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இன்றும் கனமழை

இதை தவிர நகரின் பிறகு பகுதிகளில் 75 மில்லி மீட்டருக்கும் அதிக மழை பெய்துள்ளது. பெங்களூருவில் இன்றும் (வியாழக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story