விவசாயி கொலை வழக்கில் 2 பேர் கைது


விவசாயி கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2020 11:28 PM GMT (Updated: 2020-10-22T04:58:11+05:30)

செல்போனை தர மறுத்ததால் விவசாயி கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்காரணை ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் மாதவன் (வயது 60). விவசாயி. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், பாஸ்கர் என்ற மகனும், வெளிநாட்டில் வசித்து வரும் ஷர்மிளா என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி காலை தனது கிராமத்தில் நடைபயிற்சிக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மாதவனிடம் இருந்து செல்போனை பறித்தனர்.

ஆனால், அவர் செல்போனை விடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த நிலையில், பெரியபாளையம் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாகரல் கிராமம், வேட்டைக்கார தெருவை சேர்ந்த சகோதரர்களான விக்கி என்ற விக்னேஷ் (22), சந்தோஷ் (19) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் தனசேகரனை கொலை செய்தது தெரியவந்தது.

கைது

அவர்கள் அளித்த தகவலின்படி செல்போனை போலீசார் மீட்டனர். மேலும், விக்கி, சந்தோஷ் ஆகியோர் மாகரல் கிராமத்தை சேர்ந்த தனசேகரன் (20) என்பவருடன் சேர்ந்து திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள திருக்கள்ளீஸ்வரர் கோவில் மற்றும் அத்திவாக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் போன்றவற்றில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். விக்கி மீது பெரியபாளையம், வெங்கல், புழல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் இவர் 3 முறை சிறை சென்றதும் தெரியவந்துள்ளது.

மேற்கண்ட 3 பேரும் லாரியில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக வேலை செய்வதும் போதிய பணம் கிடைக்காத போது வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவந்தது.

Next Story