கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி வருகை


கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி வருகை
x
தினத்தந்தி 23 Oct 2020 6:00 AM IST (Updated: 23 Oct 2020 6:00 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) தூத்துக்குடி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் வருகை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தந்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்று சிறப்புமிக்க எண்ணற்ற புதிய திட்டங்களையும் அறிவிக்கிறார்.

மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.37 கோடி செலவில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட ஏரல் தாலுகாவுக்கு புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. மேலும் பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

1,154 கால்நடை டாக்டர்கள் நியமனம்

இந்தியாவிலேயே கால்நடை பராமரிப்பு துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக சிறப்புற்று விளங்குகிறது. கால்நடை டாக்டர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் வெளிப்படையான தேர்வு நடத்தி, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. விரைவில் தமிழகத்தில் 1,154 நிரந்தர கால்நடை டாக்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

மேலும், தமிழகத்தில் 2,325 கால்நடை கிளை நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. அதனை கால்நடை மருந்தகங்களாக மாற்றும்போது, சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு மட்டும் 25 கால்நடை கிளை நிலையங்கள் மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது. மேலும், 5 கால்நடை ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக கால்நடைகள் இருப்பதால், இந்த ஆண்டில் 350 கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், நபார்டு வங்கி மூலமாக 120 கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர்கள், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story