ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக்கோரி சென்னை கோட்டையை நோக்கி பேரணி - ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு


ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக்கோரி சென்னை கோட்டையை நோக்கி பேரணி - ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 1:31 PM GMT (Updated: 23 Oct 2020 1:31 PM GMT)

ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக்கோரி சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சுதாமணிரத்தினம், தலைவர் முத்துக்குமாரசாமி, செயலாளர் ஜெயசந்திரன், பொருாளாளர் அப்பாரவிக்குமார், அமைப்பு செயலாளர் ஜே.ஆர்.ஜி. தமிழ்வாணன், ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், இணை செயலாளர்கள் வசந்தி செல்வமணிகண்டன், கவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.

தமிழக அரசு கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை இது வரை வழங்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்தை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். ஊராட்சிகளுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் இதர பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்க வேண்டும். கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் டெண்டர் கோரப்பட்டு வேலைக்கான உத்தரவை வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாட்டு கொட்டகை, ஆட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்திற்கான பயனாளிகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் கிராம சபை ஒப்புதல் இல்லாமல், அரசியல் கட்சியினர் தேர்ந்தெடுக்கும் பயனாளிகளுக்கு நிர்வாக அனுமதி ஆணை வழங்கி உள்ளது. ஆகவே இந்த உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் மாதம் ஒரு முறை அழைத்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். தொடர்ந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை கோட்டையை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story