குடிபோதையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை நாடகமாடிய மகன் கைது
பாகல்கோட்டை அருகே குடிபோதையில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டார். நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு,
பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வித்யாகிரிநகர் 4-வது கிராசில் வசித்து வந்தவர் காசிபாய்(வயது 62). இவரது மகன் ரவி(40). இவர், கூலி வேலை செய்து வருகிறார். ரவிக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு வந்து தனது தாய் காசிபாயிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலையில் மாரடைப்பு காரணமாக காசிபாய் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் ரவி கூறினார்.
இதனை பக்கத்து வீட்டுக்காரர்களும் நம்பினார்கள். பின்னர் தனது தாயின் அருகே இருந்தபடி ரவி அழுதபடி இருந்தார். இதற்கிடையில், காசிபாயின் கழுத்தில் காயங்கள் இருந்தன. அவரது கழுத்தை இறுக்கியதற்கான தடயங்களும் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், காசிபாயை ரவியே கொலை செய்திருக்கிலாம் என்று கருதினார்கள். இதுபற்றி நவநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து காசிபாயின் உடலை கைப்பற்றினர்.
மகன் கைது
மேலும் சந்தேகத்தின் பேரில் ரவியை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் தனது தாய் மாரடைப்பால் தான் இறந்து விட்டதாக ரவி கூறினார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாயை கொலை செய்ததை ரவி ஒப்புக்கொண்டார். அதாவது நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ரவிக்கும், அவரது தாய் காசிபாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ரவி வீட்டில் கிடந்த கயிற்றால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் காசிபாயின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தார்கள். அவர் மீது நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story