திருக்கழுக்குன்றம் அருகே மினி பஸ் கவிழ்ந்து இளம்பெண் பலி மேலும் 2 பெண்கள் படுகாயம்


திருக்கழுக்குன்றம் அருகே மினி பஸ் கவிழ்ந்து இளம்பெண் பலி மேலும் 2 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 24 Oct 2020 4:40 AM IST (Updated: 24 Oct 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே சாலையோர பள்ளத்தில் மினி பஸ் கவிழ்ந்து இளம்பெண் பலியானார். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் அடுத்த அமிர்தபள்ளம் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அலைக்குமார். இவருடைய மகள் அனுசியா (வயது 19). இவர், கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வேலை முடிந்து மினி பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகள் மோகனலட்சுமி (20) மற்றும் பாலகிருஷ்ணன் மகள் கல்பனா (22) உள்பட 6 பெண்கள் பயணம் செய்தனர்.

மினி பஸ்சை திருப்போரூரை அடுத்த ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அகஸ்டின் என்பவர் ஓட்டிவந்தார். திருக்கழுக்குன்றம் அருகே தண்டரை கிராமத்தை கடந்து அமிர்தபள்ளம் பகுதிக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிபஸ், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இளம்பெண் பலி

மினி பஸ்சில் இருந்த பெண்கள் பயத்தில் அலறினர். இதில் அனுசியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகனலட்சுமி மற்றும் கல்பனா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மினிபஸ் டிரைவர் அகஸ்டின், குடிபோதையில் ஓட்டியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான அனுசியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story