பெத்தநாயக்கன்பாளையத்தில் கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
பெத்தநாயக்கன்பாளையத்தில் கிணற்றில் தள்ளி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பாலண்டியூரை சேர்ந்தவர் ரவி (வயது 34). தொழிலாளி. இவருடைய மனைவி உதயா (27). இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி அதே பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் ரவி பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஏத்தாப்பூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உத்தரவின் பேரில் வாழப்பாடி துணை சூப்பிரண்டு வேலுமணி, இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், உதயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கொலை
இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ரவியின் மனைவி உதயா, அவரது கள்ளக்காதலன் சதீஷ் (24) ஆகியோர் சேர்ந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ரவியும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இதனால் சதீசுக்கும், ரவியின் மனைவி உதயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதை அறிந்த ரவி, தனது மனைவி உதயாவையும், நண்பர் சதீசையும் கண்டித்துள்ளார். இதையடுத்து ரவியை தீர்த்துக்கட்ட உதயா, சதீஷ் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர்.
கிணற்றில் தள்ளினார்
கடந்த 6-ந் தேதி ரவியை, சதீஷ் செல்போன் மூலம் மதுகுடிக்க அழைத்து உள்ளார். தொடர்ந்து 2 பேரும் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். ரவிக்கு போதை அதிகமாகவே, மழை வருவது போல உள்ளதால் ஒதுக்குப்புறமான இடத்தில் சென்று அமரலாம் என ரவியை, சதீஷ் நைசாக பேசி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே சென்றபோது ரவியை பின்னால் இருந்து சதீஷ் கிணற்றில் தள்ளி உள்ளார். அதிக போதையில் இருந்ததால் ரவி தண்ணீரில் மூழ்கி பலியானார். அதன் பின்னர் உதயாவை பார்த்து உனது கணவரை கிணற்றில் தள்ளி திட்டமிட்டபடி கொலை செய்து விட்டேன் என சதீஷ் கூறி உள்ளார். மேலும் நாம் தனியாக சென்று விடலாம் என்று அழைத்துள்ளார். அதற்கு உதயா, பிரச்சினைகள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தெரிவித்து உள்ளார். கணவரை கள்ளக்காதலனை வைத்து கொலை செய்து விட்டு, கணவர் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார் என்று உதயா தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் விசாரித்து கொலையாளிகளை கண்டுபிடித்து விட்டனர்.
கைது
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதயா, அவரது கள்ளக்காதலன் சதீஷ் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story