தி.மு.க.வினரின் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம்


தி.மு.க.வினரின் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2020 2:11 AM GMT (Updated: 27 Oct 2020 2:11 AM GMT)

தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கோவை,

கோவை காந்திபுரம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், குனியமுத்தூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோரை கேலியாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டர்களை கிழித்ததாக தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த போஸ்டர்களில் எந்த அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை.

கோவையில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் கைது சம்பவத்தை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வரவேற்பு

இதில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையாக்கவுண்டர், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு உதயநிதி ஸ்டாலினை தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த அமைப்பாளர் கனிமொழி என்பவர் சந்தித்து தனது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் அந்த குழந்தைக்கு செந்தளிர் என்று பெயர் சூட்டினார்.

Next Story