இந்து புராணங்களில் உள்ளதை மறுபதிவு செய்துள்ளார்: திருமாவளவன் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்து புராணங்களில் உள்ளதை திருமாவளவன் மறுபதிவு செய்துள்ளதாகவும், அவர் பேசியதில் தவறு எதுவும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தென்தாமரைகுளம்,
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமார் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு 7.5 சதவீதம் மருத்துவ துறையில் இட ஒதுக்கீடு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவர் காலச்சக்கரத்தை மாற்றி சுழற்றுகிறாரா என தோன்றுகிறது. அவர் உடனடியாக அதில் கையெழுத்து இட வேண்டும்.
‘நீட்’ தேர்வு
நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம், மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் எழுதும் வகையில் ‘நீட்‘ தேர்வு அமைய வேண்டும். படிப்பது ஒரு பாடத்திட்டம், தேர்வு எழுதுவது மற்றொரு பாடத்திட்டமாக இருப்பதை எதிர்க்கிறோம். மோடி அரசு ஒரு கலாசார படையெடுப்பை தமிழ்நாட்டில் திணிக்கிறது.
12 ஆயிரம் ஆண்டு கால இந்திய வரலாற்றை மாற்றுவதற்கு பா.ஜ.க. முயல்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தி பேசும், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே உள்ளனர். இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. இந்த குழுவை கலைக்க வேண்டும்.
திருமாவளவனுக்கு ஆதரவு
கொரோனா பெரும் தொற்று நாட்டு மக்களை பாதித்துள்ளது. அதை கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்கின்றன. அதனை தடுக்க அரசு தவறி விட்டது.
திருமாவளவன் மீது வழக்கு போட எந்தவித முகாந்திரமும் இல்லை. இந்து புராணங்களில் உள்ளதை அவர் மறு பதிவு செய்துள்ளார். புராணங்களில் பெண்களை இழிவாக கூறியுள்ளனர். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும். இது எங்கள் தொகுதி. குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றது அவருக்கு தான் பின்னடைவு.
திருமாவளவன் இந்து மதத்திற்கு எதிராக பேசவில்லை. மதத்தில் உள்ள தவறுகளை நாமே சுட்டிக்காட்டினால் தவறில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, விஜய் வசந்த், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் ஸ்ரீநிவாசன், வட்டார தலைவர் முருகேசன், நகர தலைவர்கள் கிங்ஸ்லின், ஜார்ஜ் வாஷிங்டன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அருள் சபிதா ரெக்சலின், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணை தலைவர் தர்மபுரம் கென்னடி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story