ஈரோட்டில், கூலி பிரிப்பதில் தகராறு: கட்டையால் அடித்து வாலிபர் படுகொலை
ஈரோட்டில், கூலி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கட்டையால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
ஈரோடு,
சேலம் மாவட்டம் ஓமலூர் குதிரைகுட்டிபள்ளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் வீரப்பன் (வயது 19). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 1½ மாதங்களாக ஈரோடு மோளகவுண்டம் பாளையத்தில் உள்ள அவரது அத்தை செல்லம்மா என்பவரது வீட்டில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த ஒரு வாரமாக வீரப்பன், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), திருநாவுக்கரசு (21) ஆகியோருடன் சேர்ந்து கட்டிட சென்டிரீங் வேலையில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு கூலி பணம் பிரிப்பதில் சக தொழிலாளர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அன்று இரவு வழக்கம்போல் வீரப்பன் அவரது அத்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
அடித்து கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற வீரப்பன் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் மோளகவுண்டம் பாளையம் நகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம் அருகே உள்ள ஒரு குட்டை பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாகவும், ரெயில்வே தண்டவாளம் சில அடி தூரத்தில் இருப்பதால் அந்த பகுதி மக்கள் ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ரெயில் மோதி இறக்கவில்லை என்பதும், அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
2 பேரிடம் விசாரணை
மேலும் இதுபற்றிய தகவல் அறிந்து ஈரோடு தாலுகா போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போனவர் கட்டிட தொழிலாளியான வீரப்பன் என்பதும், அவரை யாரோ கட்டையால் அடித்து படுகொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரப்பனுடன் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்த சக்திவேல், திருநாவுக்கரசு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், கூலி பணம் பிரிப்பதில் எழுந்த தகராறு காரணமாக வீரப்பனை மறைவிடத்திற்கு அழைத்து சென்று கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலையை சக்திவேல், திருநாவுக்கரசு ஆகிய 2 பேரும் சேர்ந்து செய்தனரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story