பெங்களூரு ஆஸ்பத்திரியில் பிரபல கொள்ளையன் முருகன் ‘எய்ட்ஸ்’ நோயால் சாவு
திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியான, பிரபல கொள்ளையன் முருகன் ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் 1-ந் தேதி இந்த நகைக்கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், நகைக்கடைக்குள் இருந்த ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நகைக்கடையில் கொள்ளையடித்தது யார்? என்பதை போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை. இந்த வழக்கில் போலீசாருக்கு துப்பு கிடைக்காமல் கண்ணாமூச்சி காட்டி வந்தது.
சீராத்தோப்பு முருகன்
இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த சிறிது நாட்கள் கழித்து தமிழ்நாடு திருவாரூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மேலும் மணிகண்டனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ நகைகளில், லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் டேக் ஓட்டப்பட்டு இருந்தது.
விசாரணையில் மணிகண்டன் திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் என்பவரின் கூட்டாளி என்பதும், முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தான் லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மணிகண்டன் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த முருகனையும், கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசி தேடிவந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகனின் அக்காவான கனகவள்ளி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
பெங்களூரு கோர்ட்டில் சரண்
ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட முருகன், மற்றும் அக்காள் கனகவள்ளியின் மகன் சுரேஷ் ஆகிய 2 பேரும் போலீசாரிடம் சிக்காமல் போக்குகாட்டி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தங்களை தீவிரமாக தேடுவதை அறிந்த முருகன் பெங்களூரு மோயோ ஹால் கோர்ட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள கோர்ட்டில் சுரேசும் சரண் அடைந்தனர். இதையடுத்து கோர்ட்டுகளில் சரண் அடைந்த முருகன், சுரேசை திருச்சி கோட்டை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும் திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த, லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் கடந்த ஆண்டு (2019) திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள வங்கியில் 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போனது. இந்த கொள்ளை சம்பவத்திலும் முருகன் கும்பலே ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடந்தது.
போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம்
இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பெங்களூருவில் பல இடங்களில் நடந்த திருட்டு வழக்குகளில் முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் முருகன் மீது பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் பெங்களூரு போலீசார் முருகனை கைது செய்து பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைத்து இருந்தனர். மேலும் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் நடந்த கொள்ளை சம்பவங்களிலும் முருகனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே முருகனிடம் தமிழக போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும், தனது அக்காள் மகனை வைத்து திரைப்படம் எடுக்க முருகன் முயற்சி செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகின. மேலும் பிரபல நடிகை ஒருவருக்கும், முருகன் கொள்ளையடித்த நகைகளை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஜாமீன்
இதற்கிடையே கடந்த மே மாதம் நகைக்கடை கொள்ளை தொடர்பாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், திருச்சி கோட்டை போலீசார் முருகன் உள்பட சிலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் பெங்களூருவில் முருகன் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்ததால், முருகனால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந்த நிலையில் முருகனுக்கு எச்.ஐ.வி.(எய்ட்ஸ்) உள்ளிட்ட சில நோய்கள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறையில் உள்ள மருத்துவமனையில் முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிரேத பரிசோதனை
உடல்நிலை மேலும் மோசமானதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு ஜெயநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகன் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 4 மணியளவில் இறந்தார். இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று முருகனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்ததும் முருகனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story