வெளியூர் மீன்களை விற்க எதிர்ப்பு: நவீன மீன் அங்காடியை மீனவர்கள் முற்றுகை
வெளியூர் மீன்களை கொள்முதல் செய்து விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவீன மீன் அங்காடியை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி ஆகியவற்றில் அதிக அளவில் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு மீன் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரும் மீன்களை கொள்முதல் செய்து வருவதாகவும் உள்ளூர் மீனவர்களிடம் மீன் வாங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு புதுவை மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலையில் வீராம்பட்டினம் உள்பட சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியை முற்றுகையிட்டு இதுதொடர்பாக மீன் வியாபாரம் செய்தவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.
வாக்குவாதம்
அப்போது புதுச்சேரி மீனவர்கள் பிடிக்கும் மீன்களை மட்டும் விற்க அனுமதிக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகளிடம் வலியுறுத்தினார். இதனால் இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து கொண்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக இருதரப்பினரும் அமர்ந்து பேசிக்கொள்ளலாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கப் போவதாக கூறி விட்டு உள்ளூர் மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மீனவர்களின் போராட்டத்தால் நவீன மீன் அங்காடியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story