செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 10:49 PM GMT (Updated: 29 Oct 2020 10:49 PM GMT)

செந்துறையில் குஷ்பு உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் கடம்பன் தலைமை தாங்கினார். முன்னதாக அம்பேத்கர் சிலை அருகே இருந்து திரளான பெண்களும், கட்சி பொறுப்பாளர்களும் வாகனங்களில் ஊர்வலமாக பஸ் நிலையம் வந்தனர்.

அங்கு பஸ் நிலையம் முன்பு அமர்ந்து, குஷ்புவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது புகார் செய்த பா.ஜ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், என்றும் பேசினர்.

உருவப்படங்கள் எரிப்பு

இந்த நிலையில் திடீரென சிலர், நடிகைகள் குஷ்பு, காயத்திரி ரகுராம் ஆகியோரின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், செந்துறை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார், உருவப்படங்களை எரித்த நபர்களை அப்புறப்படுத்தியதோடு, கூட்டத்தினரையும் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அன்பானந்தம், கருப்புசாமி, மாறன், செல்லமுத்து, பாலசிங்கம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story