ஜெயங்கொண்டம் அருகே, பின்பக்க கதவை உடைத்து வீட்டில் 13½ பவுன் நகை- பணம் திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே, பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 13½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த கொளஞ்சிராஜாவின் மனைவி முத்துச்செல்வி. தொழிலாளியான இவர் தனது வீட்டில் கைத்தறி மூலம் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொளஞ்சிராஜா தற்கொலை செய்து கொண்டார். இதனால் முத்துச்செல்வி நெசவு வேலை செய்து, குடும்பத்தை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு அவர் தனது குழந்தைகளுடன் பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் சென்று தங்கினார். நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அங்குமிங்கும் சிதறி உடைக்கப்பட்ட நிலையிலும், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13½ பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருட்டு நடந்த வீட்டிற்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். மேலும் பெரம்பலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்ற நாய், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வடக்கு ஏரிக்கரை வரை ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள முத்துச்செல்வியின் தாய் வீட்டிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story