ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்


ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
x
தினத்தந்தி 2 Nov 2020 8:40 AM IST (Updated: 2 Nov 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி, 

தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் கோரிக்கை மாநாடு தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மாது தலைமை தாங்கினார். வணிக வரி அலுவலர் சங்க நிர்வாகி முருகன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் ராஜ்குமார், சரஸ்வதி, கனகவல்லி, கிருஷ்ணம்மாள், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முருகப்பெருமாள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த மாநாட்டில் ஒருங்கிணைப்புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன் கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் தினக்கூலியாக பணியாற்றும் அரசு ஊழியர்களை பணி நிரந்தரமாக்கி அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களையும் குழுவின் பரிந்துரைகளின்படி அரசாணைகளை உடன் வெளியிட வேண்டும்.

ரத்து செய்ய வேண்டும்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குககளை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தொற்று பாதித்த அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி மதுரையில் மாநில அளவில் கோரிக்கை மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் மோகன மூர்த்தி, சரவணராஜ், மாநில பொதுச்செயலாளர் உஷாராணி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிதி காப்பாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Next Story