ஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்று விட்டனர். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் தெற்கு வண்ணாரத் தெருவில் பாலவிநாயகர் கோவிலும், நாகல்குழி செல்லும் பாதையில் உள்ள கருப்புவிநாயகர் கோவிலும் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் இந்த 2 கோவில்களிலும் இரும்பு கேட்டில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் உடைந்து கிடந்தன.
மேலும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இந்த உண்டியல்களில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் திருடு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
பொதுமக்கள் அச்சம்
இதேபோல் கடந்த மாதம் இந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ள மூதாட்டியிடம் மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்று நடித்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே மூதாட்டியின் மகள் வீட்டில் 13 ½ பவுன் நகை ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது. தொடர்ந்து வாரியங்கால் பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசாரும் திருட்டு ஆசாமிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
Related Tags :
Next Story