சேலம் அருகே துணிகரம் நகைக்கடையில் ரூ.3¼ லட்சம் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
சேலம் அருகே நகைக்கடையில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை போனது. இதில் ஈடுபட்ட முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலம் அருகே சித்தனூர் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 39). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரிடம் பொதுமக்கள் சிலர் நகைகளை அடகு வைத்தும் வந்தனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை மட்டுமே கடை செயல்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் மதியம் சுமார் 1 மணி அளவில் ராஜா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய நகைக்கடையின் ஷட்டரில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராஜாவுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் கடைக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது கடையில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் யாஸ்மின், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் நகைக்கடையில் 5½ பவுன் நகை மற்றும் 3½ கிலோ வெள்ளி ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொள்ளை நடந்த நகைக்கடைக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தது. அது சிறிது தூரம் ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனிடையே நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
முகமூடி கொள்ளையர்கள்
அப்போது அதில், முகமூடி அணிந்திருந்த 2 கொள்ளையர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 2½ மணி அளவில் நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நகைக்கடையில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story