தேங்காப்பட்டணம் துறைமுகத்தை சீரமைக்கக்கோரி 8 கிராம மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்


தேங்காப்பட்டணம் துறைமுகத்தை சீரமைக்கக்கோரி 8 கிராம மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 4:20 AM GMT (Updated: 4 Nov 2020 4:20 AM GMT)

தேங்காப்பட்டணம் துறைமுகத்தை சீரமைக்கக்கோரி சின்னத்துறையில் 8 கிராம மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நித்திரவிளை, 

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. துறைமுகத்தின் நுழைவு வாயிலில் பெரிய மணல் திட்டுகள் உருவாகியிருப்பதால் அடிக்கடி ராட்சத அலைகள் எழுகிறது. இதனால் கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து பல மீனவர்கள் பலியாகி உள்ளனர்.

இதுபோல், கடந்த சில மாதங்களில் மட்டும் மார்த்தாண்டன்துறையை சேர்ந்த ஷிபு, இக்னேஷியஸ், முள்ளூர்துறையை சேர்ந்த அந்தோணி மற்றும் சில நாட்களுக்கு முன்பு வள்ளவிளையை சேர்ந்த ஏசுதாசன் ஆகிய 4 மீனவர்கள் படகு கவிழ்ந்து பலியாகியுள்ளனர்.

தொடர் போராட்டம்

மணல் திட்டுகளால் ராட்சத அலையில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவதால் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக சீரமைக்க கோரியும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்தூர் மண்டலத்துக்கு உள்பட்ட இரையுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராமங்களை உள்ளடக்கி அலைகள் மீனவர் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

இதில் தூத்தூர் மண்டல மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது 300 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டு படகுகளை இரயுமன்துறை பொழிமுகம் பகுதி அருகே தாமிரபரணி ஆற்றில் நிறுத்தி விட்டு, சின்னத்துறையில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு வேண்டும்

தூத்தூர் உயர் மறைவட்ட முதன்மை குரு ஜோசப் பாஸ்கர் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இரயுமன்துறை பங்குதந்தை ரெஜீஸ்பாபு, பூத்துறை பங்குதந்தை ஜோஜி புஷ், தூத்தூர் பங்குதந்தை ஜோணிடான், சின்னத்துறை பங்குதந்தை டோணி, இரவிபுத்தன்துறை பங்குதந்தை ஜெரோம், வள்ளவிளை பங்குதந்தை ரிச்சர்ட், மார்த்தாண்டன்துறை பங்குதந்தை பிரான்சிஸ் அசிசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் தொழிலுக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, துறைமுகத்தின் அலைதடுப்பு சுவர் நீளத்தை அதிகரித்து பாதுகாத்திட வேண்டும், துறைமுக முகத்துவாரம் மற்றும் உள்பகுதியை ஆழப்படுத்திட நிரந்தரமாக மணல் அள்ளும் இயந்திரம் அமைக்க வேண்டும், ஒகி புயலில் இறந்த மீனவர்களுக்கு வழங்கிய நிவாரணம் போல், இறந்த 4 மீனவர்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.20 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும், மானிய விலையில் டீசல் மண்எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பாதுகாப்பு பணி

இந்த போராட்டம் காரணமாக நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர்.

மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக நடைக்காவு, நித்திரவிளை சுற்று வட்டார பகுதி மீன் சந்தைகளில் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. 

Next Story