பட்டுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 139 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது
பட்டுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வயலில் மோட்டார் அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 139 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சை கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கர் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர்.
பட்டுக்கோட்டை தாலுகா பண்ணவயல் கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள மின்மோட்டார் அறைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த அறையில் சிறிய, சிறிய மூட்டைகள் இருந்தன. அவற்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
120 பொட்டலங்கள்
ஒவ்வொரு மூட்டையிலும் சிறிய, சிறிய பொட்டலங்களாக கஞ்சா பார்சல் செய்து வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 120 கஞ்சா பொட்டலங்கள் அதில் இருந்தன. அவற்றின் மொத்த எடை 139 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை பட்டுக்கோட்டை தாலுகா குப்பத்தேவன் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன்(வயது 36), பண்ணவயல் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்த ராஜா(29), திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரை சேர்ந்த செல்லப்பன்(52), வீரமணி(30) ஆகிய 4 பேர் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
இலங்கைக்கு கடத்த முயற்சி
இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தக்க தருணத்திற்காக காத்திருந்தனர். அதுவரையில் பாதுகாப்பாக கஞ்சாவை வைத்திருப்பதற்காக ராஜாவின் உறவினரான கண்ணன் என்பவரின் வயலில் உள்ள மின் மோட்டார் அறையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, கியூ பிரிவு போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அய்யப்பன், ராஜா, செல்லப்பன், வீரமணி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நாகை மாவட்டத்தில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story