வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்; 100 பேர் கைது


வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்; 100 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2020 10:05 AM IST (Updated: 7 Nov 2020 10:05 AM IST)
t-max-icont-min-icon

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததால் சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடத்தப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். ஆனால் இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், தடையை மீறி சென்னையில் இருந்து நேற்று திருத்தணி நோக்கி பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், வாகனத்தில் வேல் யாத்திரையை தொடங்கினார். ஆனால் திருத்தணியில் வேல் யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். சேலம் மரவனேரியில் உள்ள மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நேற்று காலை ஏராளமான பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அப்போது, பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அங்கிருந்த அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் யாரும் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், அனைவரும் கலைந்து செல்லுமாறும் கூறினார்.

அப்போது, திருத்தணியில் மாநில தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரையை தொடங்க உள்ளார், அந்த யாத்திரையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் சேலத்தில் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக நிர்வாகிகள் கோபிநாத், அண்ணாதுரை ஆகியோர் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனால் போலீசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் திருத்தணியில் வேல் யாத்திரைக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்த பா.ஜனதா கட்சியினர், சேலம் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சேலம் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் அவர்கள் கோட்ட பொறுப்பாளர் கோபிநாத் தலைமையில் வேலை கையில் வைத்துக்கொண்டு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சந்திரசேகரன், உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த 100 பேரை கைது செய்தனர். இதில் 18 பெண்கள் அடங்குவர். பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி கோட்டை பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story