தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்


தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2020 3:41 AM IST (Updated: 10 Nov 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்று பேசியதாவது:-

புதிய அரசு உருவாகும்

இந்தியாவில் தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் ஜனநாயகத்தை சீரழித்து வரும் பா.ஜ.க. ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

மக்களை குழப்புவதற்காக, மதவெறியை தூண்டுவதற்காக வேல் யாத்திரை நடத்தும் பா.ஜ.க., ஏன் இதுபோன்ற யாத்திரைகளை சமூக நலன்களுக்காக, இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக, பெண்களின் நலனுக்காக நடத்தக்கூடாது. எதற்கெடுத்தாலும் இந்துத்துவா என்று பேசி பேசியே மக்களிடம் ஒற்றுமையை உடைக்க பார்க்கிறார்கள். மதங்களை வைத்து மக்களை துண்டாடுவது பெரிய குற்றம். இதற்கெல்லாம் ஒரு விடிவு பிறக்கும். தமிழகத்தில் விரைவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு, ஒரு கூட்டணி அரசு நிச்சயம் உருவாகும். அதற்காக நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவல்லபிரசாத், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், எஸ்.சி. துறை தலைவர் கு.செல்வபெருந்தகை, ஊடகத்துறை தலைவர் ஆர்.கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் திரவியம், வீரபாண்டியன், ரூபி மனோகரன், மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் விஜயதரணி, செயலாளர் ஹசீனா சையத், மாநில தலைவர் ஆர்.சுதா உள்பட ஏராளமான நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கல் எறியும் போராட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் காவடி ஏந்தி தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். அந்த காவடியில் பா.ஜ.க.வை விமர்சித்து வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. பின்னர் கற்பழிப்பு கொலை குற்றவாளிகள் என்று 3 பேர் முகமூடி அணிந்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் காகித உருண்டைகளை எறிந்து நூதன கல் எறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட மேடைக்கு அருகிலேயே ஒரு மேடை தயார் செய்து அதில் அம்பேத்கர், இந்திராகாந்தி போன்ற வேடமணிந்த இருவர் நிறுத்தப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அவர்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிவடைந்தும் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டிருந்த மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமையிலான காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். 

Next Story