படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை


படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2020 3:50 AM IST (Updated: 10 Nov 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள புதுநல்லூர் அண்ணா நகர் தளபதி தெருவை சேர்ந்தவர் ஞானராஜ் என்கிற ஜேசுதாசன் (வயது 54). இவருடைய மகன் இஸ்ரவேல் மோசஸ் (26). தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் இருவரும் வீட்டில் இருந்தபோது இஸ்ரவேல் மோசசை ஒருவர் அழைத்துள்ளார்.

இஸ்ரவேல் மோசஸ் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது அந்த பகுதியில் இருந்த மர்ம நபர்கள் அவரை தந்தையின் கண் முன்னே சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயம் அடைந்த இஸ்ரவேல் மோசஸ் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீசில் புகார்

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஞானராஜ் சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில்:-

பழைய நல்லூர் பகுதியில் வசிக்கும் நவமணி (26) என்பவர் முன்விரோதம் காரணமாக தூண்டுதலின் பேரில்தான் அட்டை என்கிற வெங்கடேஷ், (19) எலி அப்பு என்கிற விக்னேஷ், (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து எனது மகனை கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

4 பேர் கைது

எனவே இவர்கள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து பத்திரிகையாளர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நவமணி, வெங்கடேஷ், விக்னேஷ், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story