சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - வாலிபர் பரிதாப சாவு


சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - வாலிபர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 11 Nov 2020 12:16 PM GMT (Updated: 2020-11-11T17:46:13+05:30)

சித்தூர் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரீகாளஹஸ்தி, 

சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் தெல்லரால்லப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 23). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான 20 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம், இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.

இதனால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக்காதலர்கள் தங்கள் தொடர்பை நிறுத்தவில்லை. இதனால் மீண்டும் அப்பெண்ணின் கணவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கண்டித்து, எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கள்ளக்காதலர்கள் இருவரும் திடீரென மாயமானார்கள். அவர்களை உறவினர்கள் தேடிவந்தனர். அப்போது யாதமரி மண்டலத்தில் உள்ள தோனிரேவுலப்பள்ளி அருகில் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

உடனடியாக பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது இளம்பெண் மயங்கிய நிலையில் இருந்தார். திலீப்குமார் இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து அந்தபெண்ணை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அருகில் உள்ள சீலாப்பள்ளி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலீப்குமாரின் உடலை யாதமரி போலீசார் மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகேஷ்வர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story