ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தார்: “தூத்துக்குடி சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலினே காரணம்” எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்தார்: “தூத்துக்குடி சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலினே காரணம்” எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Nov 2020 12:28 AM GMT (Updated: 12 Nov 2020 12:28 AM GMT)

“ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்ததன் மூலம் தூத்துக்குடி சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலினே காரணம்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த விழா மேடைக்கு காலை 9 மணி அளவில் வந்தார். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து ரூ.22 கோடியே 37 லட்சம் மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.328 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும், பல்வேறு துறைகள் சார்பில் 15 ஆயிரத்து 792 பயனாளிகளுக்கு ரூ.37 கோடியே 55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் கலெக்டர் அலுவலக சிப்பி கூடத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய, மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடிக்கு அ.தி.மு.க. அரசு எதுவுமே செய்யவில்லை என கனிமொழி கூறியிருக்கிறார். இந்த அரசு என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது என்பது ஊடகங்களுக்கு தெரியும், மக்களுக்கு தெரியும். கனிமொழிக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு தெரிந்தால் போதும்.

பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அந்த கருத்துக்களை அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து கொண்டே வருகிறோம். முன்பு இருந்ததைவிட தற்போது 35 முதல் 40 சதவீத கடைகள் குறைக்கப்பட்டு உள்ளன.

போலி விவசாயி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றியே தெரியாது. அவர் ஒரு போலியான விவசாயி. தூத்துக்குடிக்கு அவர் வந்த போது பதநீரை குடித்துவிட்டு, இதில் சர்க்கரை கலந்துள்ளதா? என கேட்டார். அவர் எப்படிபட்டவர் என்பது இதன்மூலம் தெரியும். மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன்.

மு.க.ஸ்டாலின் என்ன தொழில் செய்து வருகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. தொழிலே செய்யாமல் பிழைப்பு நடத்துகிறவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் இருக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது?

விவசாயம் முதன்மை தொழில்

என்னை பொறுத்தவரை அரசியலில் இருந்தாலும் முதன்மையான தொழில் விவசாயம் தான். இன்றைக்கும் நான் வேளாண்மை தொழில் செய்கிறேன். சிறு வயது முதலே விவசாய தொழிலை மேற்கொண்டவன், கடினமாக உழைத்தவன் நான். எனது உழைப்பை பற்றி அவர் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

நீர் மேலாண்மை திட்டத்தில் இன்று தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. வேளாண் துறையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக இருப்பதால் தான் நீர் மேலாண்மை திட்டத்தில் முதன்மை வகிக்கிறோம்.

மருத்துவ கல்லூரிகள்

குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் போன்றவை அ.தி.மு.க. ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன. நீர் மேலாண்மைக்கு தி.மு.க.வினர் என்ன செய்தார்கள்? எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி இருக்கிறோம். இதன் மூலம் புதிதாக 1,650 மருத்துவ படிப்புக்கான இடங்களை உருவாக்கி இருக்கிறோம். நான் முதல்-அமைச்சரான பிறகு 6 சட்டக்கல்லூரிகளை தொடங்கியிருக்கிறோம். இது அ.தி.மு.க. அரசின் சாதனை இல்லையா?. மு.க.ஸ்டாலின் என்ன சாதனை படைத்து இருக்கிறார்.

தூத்துக்குடி சம்பவம்

தூத்துக்குடி சம்பவம் நடைபெறுவதற்கு 100-க்கு 100 சதவீதம் மு.க.ஸ்டாலின் தான் காரணம். அவர் அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2-ம் கட்ட விரிவாக்கத்துக்கு இடம் ஒதுக்கப்படும் என்று கூறி உள்ளார். மு.க.ஸ்டாலின் பேசியது இன்றைக்கும் சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருக்கிறது. எங்களுக்கு எதுவும் தெரியாது என அவர் பேசி வருகிறார். யார் வேண்டுமானாலும் அந்த குறிப்பை பார்க்கலாம். யாராலும் அதை மறைக்க முடியாது. ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலினே கையெழுத்து போட்டு நிலம் ஒதுக்கியுள்ளார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். அவர் பச்சை பொய் பேசி வருகிறார். இப்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துவிட்டு பழியை எங்கள் மீது போடுகிறார்கள்.

ஸ்டெர்லைட் 2-ம் கட்ட விரிவாக்கம் இல்லையென்றால் தூத்துக்குடி சம்பவம் நடந்திருக்காது, பிரச்சினையே வந்திருக்காது. ஆகவே, இந்த பிரச்சினை வருவதற்கு முழு காரணம் மு.க.ஸ்டாலின் தான்.

கல்வியில் புரட்சி

கல்வியில் அ.தி.மு.க. அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை 42 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி உள்ளோம். வல்லரசு நாடுகள்கூட இவ்வாறு வழங்கியதில்லை.

தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 2011-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்றபோது இது 34 சதவீதமாகவே இருந்தது. கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிநவீன கருவி

முன்னதாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள அதிநவீன கருவியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இயக்கி தொடங்கி வைத்தார். ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள ஆராய்ச்சி ஆய்வகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

Next Story